ட்ரெண்டிங்

ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் கஞ்சா கடத்தல்! 

ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் கஞ்சா கடத்தி வந்த மதுரை பெண் வியாபாரியையும், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆண் வியாபாரியையும் ஓமலூர் மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம், ஓமலூர் வழியாக ஆந்திராவில் இருந்து கோவை, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, இரும்பாலை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான காவல்துறையினர், கஞ்சா கடத்தலைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில், ஆந்திராவில் இருந்து ஒரு பெண்ணும், ஆணும் சேலம் வழியாக கோவைக்கு கஞ்சா கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மகுடஞ்சாவடிக்கு அருகே பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்த நிலையில், இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். 

இதில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பதும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் ராஜா என்பதும் தெரிய வந்தது. மேலும், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்வதற்கு கஞ்சாவைக் கொண்டுச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.