ட்ரெண்டிங்

முனியப்பன் கோயிலில் எருதாட்ட விழா கோலாகலம்! 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு எருதாட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது. 

முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள முனியப்பன் கோயிலில் கடந்த ஒருவாரமாக சுற்றுவட்டார கிராம மக்களால் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, கிராம மக்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகள், பன்றிகளைப் பலியிட்டும் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். 

திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக எருதாட்ட திருவிழா நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டு கோயில் வளாகத்தில் எருதாட்ட விழா நடைபெற்றது. கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒவ்வொரு காளையா களத்தில் அவிழ்த்துவிடப்பட்டது. 

வண்ணப்பொடிகளை இளைஞர்கள் தூவிய போது காளைகள் ஒவ்வொன்றும் கோயில் வளாகத்தில் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்து சென்றது காண்போரை பெரிதும் கவர்ந்தது. சுமார் 100- க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சுமார் 2 மணி நேரம் களத்தில் அங்கும், இங்கும் ஓடி விளையாடின. 

இதில் சிறப்பாக விளையாடி மக்களைக் கவர்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.