ட்ரெண்டிங்

சீரான மின்சாரம்- அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு! 

கோடைக் காலத்தின் போது சீரான மின்சாரம் வழங்குவதை உறுதிச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். 

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மின்விநியோகம் தொடர்பாக தமிழ்நாடு நிதித்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மின்சார வாரியத்துறை அதிகாரிகள், தலைமை பொறியாளர்கள் உள்ளிட்டோருடன் காணொளி வாயிலாக இன்று (மார்ச் 01) பிற்பகல் 03.00 மணிக்கு ஆலோசனை நடத்தினார். 

கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "கோடைக் காலத்தின் போது சீரான மின்சாரம் வழங்குவதை உறுதிச் செய்ய வேண்டும்; 10, 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் பராமரிப்புக்காக மின் நிறுத்தம் செய்ய வேண்டாம். தேர்வு காலம் முடியும் வரை துணைமின் நிலையங்களில் மின் பராமரிப்புப் பணிகளைச் செய்ய வேண்டாம். 

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ச்சியாக மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி சீர் செய்ய வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.