ட்ரெண்டிங்

விமானங்களில் பயணிக்க ஆர்வம் காட்டும் சேலம் மக்கள்!

 

கடந்த நவம்பர் மாதம், சுமார் 7,000- க்கும் மேற்பட்ட பயணிகள் சேலம் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் மூலம் பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

 

சேலம் மாவட்டம், காமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தொடங்கிய ஒரே மாதத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகரித்திருப்பதால் விமான நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

சேலம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, சென்னை, கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இண்டிகோ ஏர்லைன்ஸ், அலையன்ஸ் ஏர் ஆகிய விமானங்கள் நிறுவனங்கள், சேலத்தில் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகளை வழங்கி வருகின்றன.

 

கடந்த நவம்பர் மாதம் வருகை, புறப்பாடு என தலா 86 விமான சேவைகளை இண்டிகோ ஏர்லைன்ஸ், அலையன்ஸ் ஏர் விமான நிறுவனங்கள் வழங்கியுள்ளன. இதில் 3,686 பேர் சேலத்திற்கு விமான மூலம் வந்துள்ளதாகவும், சுமார் 3,637 பேர் சேலத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு பயணித்துள்ளனர். இந்த தகவலை சேலம் விமான நிலையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.