ட்ரெண்டிங்

தொடர்ந்து சரிந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3ஆவது நாளாக வினாடிக்கு 54 கனஅடியாக வந்துக் கொண்டிருக்கிறது. அதேநேரம், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து மிகக் குறைவாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகமாகவும் இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

 

இன்று (பிப்.16) காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 65.73 அடியில் இருந்து 65.61 அடியாகக் குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 29.04 டி.எம்.சி.யாக உள்ளது.

 

கோடைக்காலம் தொடங்கும் முன்பே சேலம் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வருவதால், குடிநீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருவதால், ஏப்ரல், மே மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

 

ஒருவேளை கோடை மழை பெய்யும் பட்சத்தில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீர் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு மாநகராட்சி அரசு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.