தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா இன்று (நவ.08) காலை 10.00 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், "தமிழகத்தில் 12- ஆம் வகுப்பிற்கு பிறகு 53 சதவீதம் பேர் உயர்கல்விப் பயின்று வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் தொழில் துறையினர் தொழில் ரீதியாக தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளைத் தெரிவித்தால், அதனை கல்லூரி மாணவர்கள் மூலமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, பொறியியல் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தங்களின் திட்ட அறிக்கையாக, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளனர்.
சேலம் ஆவினில் இருந்து நாள்தோறும் 6.5 லட்சம் லிட்டர் பால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. பாலிதீன் பைகளில் பால் வினியோகம் செய்யப்படுவதால் சுற்றுச்சூழல் பிரச்சனை ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு மாணவர்கள் உரிய தீர்வினை உருவாக்குவார்கள். உயர்கல்வியில் மனித வளத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தொழில் துறைக்கும் பட்டதாரி இளைஞர்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது என்றார்.
இந்நிகழ்வில்,சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜவுளித்துறை,கயிறு திரிக்கும் தொழில் முனைவோர், வெள்ளிக் கொலுசு தயாரிப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



