ட்ரெண்டிங்

தேர்தல் பத்திரம் ரத்து"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

 

அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் பத்திரம் சட்ட விரோதமானவை; தேர்தல் பத்திரம் தொடர்பான சட்டங்களும் ரத்து செய்யப்படுவதோடு, தேர்தல் பத்திரம் முறையும் ரத்து செய்யப்படுகிறது. வங்கிகள் தேர்தல் பத்திரங்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; அத்துடன், ஏற்கனவே வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 

 

தேர்தல் பத்திரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியானதே. உச்சநீதிமன்ற உத்தரவு வெளிப்படையான தேர்தல் செயல்முறை மற்றும் அமைப்பின் நேர்மையை உறுதிச் செய்யும். நீதித்துறை மீதான சாமானியர்களின் நம்பிக்கை உறுதிச் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.