ட்ரெண்டிங்

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது!

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

 

சர்ச்சைக்கு பெயர் போன பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகம் சேலம் மாவட்டம், ஓமலூருக்கு அருகே உள்ள சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் மீது பல்வேறு புகார்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன.

 

இந்த சூழலில், தமிழக அரசு, பெரியார் பல்கலைக்கழகத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனிக்குழுவை அமைத்தது. இந்த நிலையில், போலி ஆவணங்களைத் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அரசு செலவில் அலுவலர்களைப் பயன்படுத்தியது தொடர்பாக, பல்கலைக்கழக தொழிலாளர் நலச்சங்க ஆலோசகர் இளங்கோவன், கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 

அதன் அடிப்படையில், வழக்குப்பதிவுச் செய்த கருப்பூர் காவல்துறையினர், பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகந்நாதனை அதிரடியாக கைது செய்தனர். இதனால் பல்கலைக்கழகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

கருப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட துணைவேந்தரிடம், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.