ட்ரெண்டிங்

பாசன நீர் நிறுத்தப்பட்டதால் நீர் மின்நிலைய மின் உற்பத்தி குறைந்தது!

 

மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்ததால், பாசனத்துக்காகத் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

 

டெல்டா மாவட்டங்களின் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பிப்ரவரி 10- ஆம் தேதி வரை விவசாயத்துக்காக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஒப்புக் கொண்டது. அதன்படி, தற்போது வரை மூன்று டி.எம்.சி. வரை பாசனத்திற்காகவும், 0.40 டி.எம்.சி. தண்ணீர் குடிநீர் தேவைக்காகவும் திறக்கப்பட்டது. இந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 66.52 அடியாகக் குறைந்ததால் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

 

தற்போது அணையில் நீர் இருப்பு 29.78 டி.எம்.சி.யாகவும், அணைக்கு நீர்வரத்து 25 கனஅடியாகவும் உள்ளது. இந்த நிலையில், குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கோடைக்காலம் தொடங்கும் முன்பாகவே அணையின் நீர்வரத்து குறைந்த நிலையில், பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டதால், நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்துள்ளது.