ட்ரெண்டிங்

"அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும்!"- எடப்பாடி பழனிசாமி பேச்சு!

 

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நடைபெற்ற நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார். 

 

அப்போது அவர் கூறியதாவது, "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும்; தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே கூட்டணியில் இருந்து பிரிந்து தனித்து களம் காண்கிறோம். அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்போருக்கு மரணஅடி கொடுக்கும் விதமாக கட்சியின் ஐ.டி.விங் நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.

 

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டத் திட்டங்களுக்கு தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் குடிநீர் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தி.மு.க. அரசு பொறுப்பேற்று நாமக்கல் மாவட்டத்திற்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. 

 

மக்களுக்காகப் பாடுபடுகின்ற கட்சி அ.தி.மு.க., அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் கிடையாது. நாமக்கல் மாவட்டம் அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை என நிரூபித்தவர் முன்னாள் அமைச்சர் தங்கமணி" என்றார்.