ட்ரெண்டிங்

கல்பகனூர் கிராமத்தில் பதற்றம்....குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்!

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் நடத்திய மாநாடு குறித்து கேலி செய்து பாடல் வெளியிட்டதாகத் தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், ஆத்தூர் ரூரல் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் தினேஷ்குமார் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு வந்து சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது சிலர், அதனை வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.

 

இதையடுத்து அங்கிருந்த இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் திடீரென கலவரமானது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். சிலர் அங்கே கிடந்த கற்களை எடுத்து வீசினர். அந்த கற்கள் விழுந்ததில் தலைமைக் காவலர் முருகவேல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

 

மேலும் அந்த பகுதியில் மோதல் ஏற்படாமல் இருக்க காவல்துறை சூப்பிரண்டு அருண் கபிலன் உத்தரவின்பேரில் கூடுதல் சூப்பிரண்டுகள் சங்கர், செல்வம் மற்றும் 50- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக கல்பகனூர் கிராமமே பதற்றத்துடன் காணப்பட்டது. இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 60 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, 10 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.