ட்ரெண்டிங்

தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சேலத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. இளைஞரணியின் 2- வது மாநில மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநாட்டு திடல் முன்பு வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் 2- வது மாநில மாநாடு திடல் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொடி கம்பத்தில் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், தி.மு.க.வின் பொருளாளரும், கட்சியின் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் முன்னிலையில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்த கனிமொழி எம்.பி. மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, ,மாநாட்டு திடல் முன்பு அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரது சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, மாநாட்டு அரங்கத்தை தி.மு.க.வின் மாணவரணிச் செயலாளர் எழிலரசன், ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர், விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் புகைப்படங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோல், மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

மாநாட்டில் தி.மு.க. இளைஞரணியின் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தீர்மானங்களை வாசித்தார். தமிழ்நாட்டை உயர்த்தப் பாடுபடும் முதலமைச்சரின் நடவடிக்கைக்கு தி.மு.க. இளைஞரணி துணை நிற்கும். பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, மருத்துவத்தை மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு எதிரான தி.மு.க. இளைஞரணிப் போராட்டம் தொடரும்.

மக்கள் விரோத பா.ஜ.க. அரசை வீழ்த்த முதலமைச்சர் எடுக்கும் நடவடிக்கைக்கு தி.மு.க. இளைஞரணி துணை நிற்கும், மகளிர் வாழ்வில் தன்னம்பிக்கையை வளர்க்கும் விடியல் பயணத் திட்டத்தை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி, இந்தியாவுக்கே முன்னோடி திட்டமான காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சருக்கு நன்றி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைத் துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய பா.ஜ.க. அரசிற்கு கண்டனம் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.