ட்ரெண்டிங்

பிரியாணியின் பீஸ் இல்லாததால் சமையற் கூடத்திற்குள் புகுந்த தி.மு.க.வினர்!

பிரியாணியில் மட்டன் பீஸ் இல்லாததால் தி.மு.க.வினர் சமையற் கூடத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் 2- வது மாநில மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (ஜன.21) இரவு 07.30 மணிக்கு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாநாட்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

மாநாட்டைக் காண தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் தலைமையில் லட்சக்கணக்கானோர் சேலம் மாநாட்டு திடலில் குவிந்துள்ளனர். இந்த நிலையில், தி.மு.க.வினருக்கு மதியம் உணவு வழங்குவதற்காக 50,000 கிலோ ஆட்டு இறைச்சியைக் கொண்டு மட்டன் பிரியாணியும், 20,000 கிலோ கோழி இறைச்சியைக் கொண்டு சிக்கன் 65-யும், பிரெட் அல்வாவும் செய்யப்பட்டிருந்தது. பிரியாணி, சிக்கன் 65, தயிர், அல்வா ஆகியவை பாக்கெட்டுகளாகத் தயார் செய்யப்பட்டு, விநியோகிக்கப்பட்டது.

எனினும், பலருக்கு பிரியாணியில் பீஸ் இல்லாததால் தொண்டர்கள் விரக்தியடைந்தனர். அத்துடன், சமையல் கூடத்திற்கு நுழைந்த தி.மு.க.வினர் பிரியாணி இருந்த பாத்திரங்களை எடுத்துச் சென்றனர். இதனால் பிரியாணி கீழே அதிகளவு கொட்டியதால் வீணானது. அதேபோல், நாற்காலிகளும், தடுப்புகளும் சேதமடைந்தது. இதனால் மாநாட்டில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

திருச்சி ஹக்கீம் பிரியாணியைச் சேர்ந்த 5,000 சமையல் கலைஞர்கள் இந்த சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.