ட்ரெண்டிங்

சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீண்டாமை உறுதிமொழி ஏற்பு!

 

உத்தமர் காந்தியடிகள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, இன்று (ஜன.30) தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியகரகத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.

 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30- ஆம் நாள், இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உத்தமர் காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி அனைத்துத்துறை அலுவலர்களும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்

கொள்ளப்பட்டது.

 

இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களும் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

 

இதனைத் தொடர்ந்து, தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக அனைவருடன் இணைந்து பாடுபட வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கி தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.