ட்ரெண்டிங்

துணைவேந்தர் மீதான ஆவணங்கள் ஆய்வு-உயர்நீதிமன்றம்!

 

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான ஆவணங்கள் ஆய்வுச் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

சேலம் கருப்பூரில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மற்றும் துணை பேராசிரியர் சதீஷ் உள்ளிட்டோர் அரசின் அனுமதியின்றி PUTER Park என்ற நிறுவனத்தைத் தொடங்கி முறைகேடு செய்ததாக கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து, துணைவேந்தருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கியது.

 

இந்த நிலையில், துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்துச் செய்யக்கோரி காவல்துறையும், தன் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்துச் செய்யக்கோரி துணைவேந்தர் தரப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

 

துணைவேந்தர் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜன.18) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "நான்கு தனியார் நிறுவனங்களுடன் பல்கலைக்கழக அனுமதியின்றி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது" என்று வாதிட்டனர்.

 

அப்போது ஆஜரான துணைவேந்தர் தரப்பு வழக்கறிஞர், "யூகத்தின் அடிப்படையில் தனக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி விவகாரங்களில் காவல்துறை தலையிட முடியாது" என்று வாதிட்டார்.

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீதான ஆவணங்கள் ஆய்வுச் செய்யப்படும் என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், தன் மீதான வழக்கை ரத்துச் செய்யக்கோரி துணைவேந்தர் ஜெகநாதன் தொடர்ந்த மனு மீதான விசாரணை நாளைக்கு (ஜன.19) ஒத்திவைத்துள்ளது.