ட்ரெண்டிங்

ஓடிபி எண் கேட்டு அழைப்பு வந்தால் நம்ப வேண்டாம்- மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவுறுத்தல்!

மகளிர் உரிமைத் தொகைப் பெறுவது தொடர்பாக ஓடிபி எண் கேட்டு அலைபேசி அழைப்பு வந்தால், நம்ப வேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 கோடி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. இரண்டு கட்ட முகாம்கள், சிறப்பு முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மேல்முறையீடு செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, இன்று (செப்.15) காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் மகளிருக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000

வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

 

இந்த நிலையில், தகுதியான பயனாளிகளுக்கு முன்கூட்டியே, அதாவது நேற்று (செப்.14) மதியம் முதல் வங்கிக்கணக்கில் ரூபாய் 1,000 தொகை வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான மகளிருக்கு நேற்றே ரூபாய் 1,000 தொகை வரவு வைக்கப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைப் பெறுபவர்களுக்கு மோசடி அலைபேசி அழைப்புகள் வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைப் பெறுவதற்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை எனவும், அதுபோன்ற போலியான அழைப்புகளை பயனாளிகள் நம்ப வேண்டாம் என்றும் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் இ.ஆ.ப. அறிவுறுத்தியுள்ளார்.