ட்ரெண்டிங்

அ.தி.மு.க. நிர்வாகி படுகொலை- நடந்தது என்ன? 


தாதகாப்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்! 

அ.தி.மு.க.வின் சேலம் மாநகர் மாவட்டம், 55-ஆவது வட்டக் கழகச் செயலாளராகவும், தொடர்ந்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டலாம்பட்டி பகுதிக் கழகச் செயலாளராகவும் பணியாற்றி வந்தவர் சண்முகம்.  2001- 2006 மற்றும் 2011- 2016 என்று இருமுறை சேலம் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினராகவும், கொண்டலாம்பட்டி மண்டலக் குழுத் தலைவராகப் பணியாற்றி உள்ளார். 

இந்த சூழலில், வழக்கம் போல் தனது பணியை முடித்துக் கொண்டு நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் தனது இல்லத்திற்கு இருசக்கர வாகனம் மூலம் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது. தாதகாப்பட்டியில் அவரை வழிமறித்த மர்மக்கும்பல், அரிவாளால் சரமாரியாக சண்முகத்தை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சண்முகம், துடித்துடித்தப்படியே உயிரிழந்தார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அ.தி.மு.க.வினர், குடும்பத்தினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் சமாதானம் பேசிய காவல்துறையினர், சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதைத் தொடர்ந்து, சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த சிசிடிவிகளில் பதிவான காட்சிகளைக் கொண்டு சந்தேகத்தின் பேரில் பலரை கைது செய்து அன்னதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார். 

இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ள சண்முகத்தின் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.