ட்ரெண்டிங்

கூலமேடு ஜல்லிக்கட்டு.... எதிர்பார்ப்பில் கிராம மக்கள்!

 

ஆத்தூர் அருகே உள்ள கூலமேடு ஜல்லிக்கட்டு ரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் நடந்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததுடன், ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் காணும் பொங்கல் தினத்தன்று, சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கூலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழா குழுவினர் இதுவரை அதற்கான ஏற்பாடு செய்யாமலும், அதற்கு உரிய அனுமதி கோராமலும் இருந்த நிலையில், நடப்பாண்டில் ஜல்லிக்கட்டு போட்டி ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து கூலமேடு கிராம மக்கள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெயர் போன கிராமம் கூலமேடு கிராமம். ஜல்லிக்கட்டு போட்டியை இந்தாண்டு நடத்தாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. பொங்கல் பண்டிகை வாரங்களிலோ அல்லது பொங்கல் பண்டிகை முடிந்தோ ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும். எங்கள் ஊரில் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.