ட்ரெண்டிங்

சென்னை- சேலம் விமான சேவை: பன்மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்!

 

பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லவுள்ள நிலையில், விமானத்தில் பயணிப்பதற்காக டிக்கெட் முன்பதிவுகளைச் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பண்டிகைக் காலம் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா, ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமானக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளனர்.

 

அதன் தொடர்ச்சியாக, சென்னை- சேலம் செல்ல ரூபாய் 2,290 என வழக்கமாக வசூலிக்கப்பட்ட விமான கட்டணம், தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி, இந்த வழித்தடத்திற்கான கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது இண்டிகோ ஏர்லைன்ஸ். சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்வதற்கு 4,696 ரூபாயாகவும், சென்னையில் இருந்து சேலத்திற்கு செல்வதற்கு 9,530 ரூபாயாகவும் விமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், சேலத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு செல்வதற்கு ரூபாய் 8,752 ஆக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்ணயம் செய்துள்ளது. இதனால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதனிடையே, அந்தமான், கோவா உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்கு செல்வதற்கான விமான பயண டிக்கெட் முழுவதும் விற்றுத் தீர்ந்துள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.