ட்ரெண்டிங்

ஆளுநரை வரவேற்ற சர்ச்சையில் சிக்கிய துணைவேந்தர்

 

பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகைத் தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஊழல் வழக்கில் சிக்கிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசின் அனுமதியின்றி நிறுவனம் தொடங்கி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் கருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் துணைவேந்தருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை வழங்கியது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன் விடுவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதன் அறை, பதிவாளர் தங்கவேல் அறை மற்றும் அவர்களது இல்லங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.


இந்த சூழலில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்திற்கு வருகைத் தந்தார். பின்னர், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஆளுநரை, துணைவேந்தர் ஜெகநாதன் பல்கலைக்கழக வளாகத்திற்கு அழைத்துச் சென்றார். ஊழல் வழக்கில் சிக்கிய துணைவேந்தர், ஆளுநரை வரவேற்றிருப்பது கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஆளுநர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், துணைவேந்தருடன் ஆலோசனை நடத்த எதிர்ப்புத் தெரிவித்தும், துணைவேந்தரை பதவி நீக்கம் செய்யக்கோரியும், தமிழ்நாடு மாணவர் சங்க கூட்டமைப்பினர், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மாணவரணியினர் என 500- க்கும் மேற்பட்டோர் கறுப்புக்கொடியை ஏந்தியவாறு, பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆளுநரே திரும்பப் போ....திரும்பப் போ என்று முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திவர்களை காவல்துறையினர் கைது செய்து, வாகனங்களில் ஏற்றி திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆளுநர் வருகையையொட்டி, பல்கலைக்கழகம் முழுவதும் பலத்தப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.s