ட்ரெண்டிங்

பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் அதிரடி சோதனை!

 

அரசின் அனுமதியின்றி தனியார் நிறுவனம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக, சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் பின்னர் நீதிமன்றத்தால் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். உடல்நலக்குறைவுக் காரணமாக, துணைவேந்தர் ஜெகநாதன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.  இந்த நிலையில், பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையடுத்து, பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் 7 இடங்களில் கடந்த டிசம்பர் 28- ஆம் தேதி 21 மணி நேரத்துக்கு மேலாக காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி இன்று (ஜன.11) மதியம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வர உள்ளார். சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானம் மூலம் வருகை தரும் அவர் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் பெரியார் பல்கலைக்கழக அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில், பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் 5 இடங்களில் சேலம் மாநகர காவல் துறையினர் இன்று காலை 10.00 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பெரியார் பல்கலைக்கழக நிதித்துறை அலுவலகம், தமிழ்த்துறை, உள் தர மதிப்பீட்டு மையம், தீன் தயாள் உபாத்தியாயா பயிற்சி மைய வளாகம், பியூட்டர் பவுண்டேஷன் ஆகிய 5 இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.