ஆன்மிகம்

சேலத்தில் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு!

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சேலம் மாவட்டம் தலைவாசல் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 55- வது ஆய்வை மேற்கொண்டோம். சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பியின் கெங்கவல்லி தொகுதியில் அமைந்துள்ள இப்பள்ளியில் 234/77 ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு மாணவியருக்கான கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்து, பள்ளியின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவோம் என உறுதியளித்தோம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல், அமைச்சரின் மற்றொரு ட்விட்டர் பதிவில், "234/77 ஆய்வுப் பயணத் திட்டத்தின் 56-வது ஆய்வை ஜெயசங்கரனின் ஆத்தூர் தொகுதியில் மேற்கொண்டோம். 1951- ல் உயர்நிலைப் பள்ளியாக தொடங்கப்பட்டு தற்போது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக செயலாற்றி வரும் பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவச் செல்வங்களுடன் உரையாடினோம்" எனத் தெரிவித்துள்ளார். 


இந்த திடீர் ஆய்வின் போது, பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை மற்றும் விளையாட்டு மைதானம், கழிப்பிடங்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வுச் செய்துள்ளார். இந்த ஆய்வின் போது, மாவட்டக் கல்வி அதிகாரிகள், கல்வி துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.