ட்ரெண்டிங்

சேலம் கோட்டத்தில் 100% பேருந்துகள் இயக்கம்!

 

சேலம் கோட்டத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இன்று (ஜன.09) முழுமையாகப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நேற்று (ஜன.08) நடந்த போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினருடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால் நள்ளிரவு முதல் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், சேலம், நெல்லை, கோவை கோட்டங்களில் இருந்து முழுமையாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன;  அதாவது, மேற்கண்ட கோட்டங்களில் 100% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் 17 பணிமனைகளில் இருந்து புறநகர், மாநகரப் பகுதிகளுக்கு வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, கரூர், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்டப் பகுதிகளுக்கு இன்று (ஜன.09) 115 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.