ட்ரெண்டிங்

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூ கேட்பதில்லை.....-இசைப் புயலுக்கு இன்று பிறந்தநாள்!

 

இந்தியாவே கொண்டாடும் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று (ஜன.06) பிறந்தநாள். அவரது திரைப்பயணத்தை திரும்பி பார்ப்போம்.

 

இந்திய சினிமாவின் இசைப் புயல் என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான், இளம் தலைமுறையினரின் இதயங்களை இசையால் ஈர்த்துக் கொண்ட ஆஸ்கர் நாயகன். இவர் தமிழ் சினிமா தொடங்கி, பாலிவுட், ஹாலிவுட் என திரை இசையைக் கடந்து தனி இசையால் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

 

 

இயக்குநர் மணிரத்னத்தின் ரோஜா திரைப்படம் மூலமாக கடந்த 1992- ஆம் ஆண்டில் தொடங்கியது ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணம். ரோஜா படத்தின் பாடல்கள் இந்தியா முழுவதும் ஹிட் ஆனது மட்டுமின்றி, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

 

அதன் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணம் உச்சத்தை நோக்கி செல்லத் தொடங்கியது. திருடா திருடா, காதலன், டூயட், பம்பாய், இந்திரா, இந்தியன், முதல்வன், உயிரே, தாஜ்மஹால், காதலர் தினம், அலை பாயுதே, பாய்ஸ், ஆயுத எழுத்து, கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் வரை முக்கிய படங்கள் எல்லாம் ஹிட் ஆனது. இசை மீது மட்டுமின்றி, தமிழ் மொழி மீதும் அதீத பற்றுக் கொண்டிருந்தார்.

 

 

ஆறு முறை தமிழக அரசின் மாநில சிறப்பு விருது, தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது, 13 முறை பிலிம்பேர் விருது, பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.

 

சுமார் 500- க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியாவில் ஐபிஎல் தொடங்கி அனைத்து தேசிய அளவிலான விழாக்கள் மற்றும் சர்வதேச விழாக்களுக்கும் இசையமைத்துள்ளார். லண்டன், பாரீஸ், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி, தனக்கென ரசிகர் பட்டாளத்தை இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் வைத்துள்ளார் என்றாலே மிகையாகாது.  

 

57 வது பிறந்தநாளை அடியெடுத்து வைக்கும் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜஸ்ட் நவ் சேலம் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகள்.