ட்ரெண்டிங்

அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம் விண்ணப்பங்கள் வரவேற்பு! 

அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது,  2025- 2026 ஆம் ஆண்டிற்கான இந்திய இராணுவத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் கோயம்புத்தூரில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். 

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த விருப்பமுள்ள ஆண்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக வரும் ஏப்ரல் 10- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள அனுமதி உண்டு. தேர்வு செயல்பாட்டில் முதலில் ஆன்லைன் பொதுத்தேர்வு நடைபெறும். அதன் பின்னர் உடல் தகுதி சோதனைகள் மற்றும் மருத்துவச் சோதனைகள் நடைபெறும். தேர்வுத் தேதிகள் இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். எனவே தகுதியுள்ள சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.