சென்னையில் நாளை (ஜன.07) தொடங்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எந்தெந்த நிறுவனத்திடம் இருந்து ஒப்பந்தம் மேற்கொள்ளக் கூடும் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் டாடா நிறுவனம், ஐஃபோன் உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்யவுள்ளது. 7,000 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள முதலீட்டால் அடுத்த ஆறு ஆண்டுகளில் 30,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் எனக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்ப் நிறுவனம், பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்நிறுவனமும் தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொழுதுபோக்கு வணிக நிறுவனமான மஹிந்திரா ஹாலிடேஸ், ரயில் சக்கரங்கள் தயாரிப்பில் உள்ள நிறுவனம், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பேட்டரி தயாரிப்பு நிறுவனம், தமிழகத்தில் முதலீடுகளை செய்து, தூத்துக்குடியில் ஆலையைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.
காலணி தயாரிப்பிலும் முதலீடுகள் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆசியாவிலேயே தனது மையத்தை சீனாவிற்கு வெளியே முதன்முறையாக சென்னையில் அமைக்கவுள்ளது.
டி.சி.எஸ்., சி.டி.எஸ். விப்ரோ உள்ளிட்ட உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடுகளை செய்யவுள்ளன.
அதேபோல், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல முன்னணி நிறுவனங்களின் உயரதிகாரிகள் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, முதலீடுகள் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளனர்.


