ட்ரெண்டிங்

பா.ஜ.க.வில் இணைந்த ஓய்வுப் பெற்ற காவல்துறை அதிகாரிகள்!

 

தமிழக அளவில் ஓய்வுப் பெற்ற காவல்துறை அதிகாரிகள், பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இதில் ஓய்வுப் பெற்ற காவல்துறைக் கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் 61 அதிகாரிகள் தங்களுடைய குடும்பத்தினருடன் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, "ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பா.ஜ.க.வில் இணைவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சமூகத்தின் பாதுகாப்பிற்காக மிக நேர்மையான முறையில் செயல்பட்ட காவல்துறையினர் ஓய்வுப் பெற்ற பின்னர் பா.ஜ.க.வில் இணைவது பொதுமக்களிடையே மிகுந்த எழுச்சியை உருவாக்கி அவர்களும் கட்சியில் சேர வழிவகுக்கும்.

 

கட்சியில் இணைந்துள்ள முன்னாள் காவல்துறையினர், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு தங்களது பகுதிகளில் கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். தற்போது முன்னாள் ராணுவத்தினருக்கான பிரிவு தற்போது பா.ஜ.க.வில் உள்ளது. இதைப் போல காவல்துறையினருக்கான பிரிவை கட்சித் தலைமையின் அனுமதி பெற்று தொடங்கப்படும்.

 

காவல்துறையில் பணியாற்றிய என்னைப் போல நீங்களும் கட்சியில் இணைந்துள்ளீர்கள். காவல்துறையினர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை, வாரத்திற்கு இருநாள் விடுமுறை மற்றும் மன அழுத்தம் இல்லாத பணி வாய்ப்பு உருவாக்கப்படும்" என்றார்.

 

இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர் சுரேஷ்பாபு மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.