ட்ரெண்டிங்

சேலம் உருக்கு ஆலை உருவானது எப்போது?

 

தமிழகத்தில் உள்ள சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் திட்டத்தைக் கைவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு முழுமையானது இல்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

மத்திய அரசின் பொதுத்துறையைச் சேர்ந்த மகா ரத்னா அந்தஸ்து பெற்ற செயில் நிறுவனம், கடந்த 1972- ஆம் ஆண்டு மே மாதம் சேலம் மாவட்டத்தில் துருப்பிடிக்காத லேசான எஃகு தயாரிக்கத் தொடங்கியது தான் சேலம் ஊருக்கு ஆலை. கட்டுமான பணிகளுக்காக முதற்கட்டமாக அப்போது ஒதுக்கப்பட்ட தொகை 181 கோடியே 19 லட்சம் ரூபாய்.

 

இந்த நிறுவனத்தில் உற்பத்திச் செய்யப்படும் உருக்கு உள்நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல், சுமார் 30- க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், சேலம் உருக்கு ஆலையைத் தனியாருக்கு விற்கும் முடிவிற்கு கடந்த 2018- ஆம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

 

இதனை எதிர்த்து, அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் பலக்கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த 2019- ஆம் ஆண்டு சேலம் உருக்கு ஆலையை விற்பனை செய்ய ஏலம் விடப்பட்ட நிலையில், ஏராளமான விண்ணப்பங்கள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த சூழலில் சேலம் உருக்கு ஆலையை வாங்க விண்ணப்பித்தவர்கள், அதன் பிறகு அந்நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை என்று முதலீடு மற்றும் பொதுச்சொத்தை நிர்வகிக்கும் துறை தெரிவித்துள்ளது. மேலும், சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் திட்டத்தைக் கைவிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அறிவிப்பு முழுமையான அறிவிப்பு இல்லை என்று கூறும் தொழிற்சங்கத்தினர், இதற்கான காரணங்களையும் தெரிவித்துள்ளனர். இது குறித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ்குமார் கூறுகையில், "முதலீடு மற்றும் பொது சொத்துக்கள் மேலாண்மை துறை தான் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் (அல்லது) அமைச்சகம் அறிவிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அறிவித்தால் தான் முழுமையாக ரத்து என ஏற்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.