ட்ரெண்டிங்

கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்- விழாக்கோலம் பூண்டது சேலம் மாநகரம்!

 

சேலம் மாநகரில் அமைந்துள்ள கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நாளை (அக்.26) காலை 08.30 மணி முதல் காலை 09.30 மணிக்குள் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

 

இதையடுத்து, யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் திருவாவடுதுறை ஆதினம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, கோயிலை சுற்றி வந்து பார்வையிட்டார்.

 

மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, சேலம் கோட்டை அழகிரிநாதர் திருக்கோயிலில் இருந்து 75 சீர்வரிசைகள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. தனது தங்கைக்கு அண்ணன் அழகிரிநாதர் வழங்கிய சீர்வரிசை இது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

சேலம் மாநகரம் மட்டுமின்றி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொள்ளவிருப்பதால், விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செய்துள்ளது. குறிப்பாக, ஆங்காங்கே ராட்சச திரைகள் மூலம் மக்கள் கும்பாபிஷேகத்தைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் கோயிலுக்கு அருகிலேயே தயார் நிலையில் உள்ளனர்.

 

அன்னதானம் மற்றும் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், பாதுகாப்புப் பணியில் 100- க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். முன்னேற்பாடுகள் குறித்து, காவல்துறை உயரதிகாரிகள் கோயிலுக்கு வந்து நேரில் ஆய்வு செய்தனர். நாளை (அக்.27) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், கூட்டம் அதிகரிக்கும் என்பதால், பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயிலின் மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, திருக்கோயில் கோபுரங்கள் மற்றும் சாலைகள் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.