ட்ரெண்டிங்

சேலம் உருக்கு ஆலை: தனியாருக்கு இல்லை- மத்திய அரசு அதிரடி!

 

தமிழகத்தில் உள்ள சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான செயில் நிறுவனத்தின் சேலம் உருக்கு ஆலையை தனியாருக்கு விற்கும் முடிவிற்கு கடந்த 2018- ஆம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இதனை எதிர்த்து, அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் பலக்கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

 

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2019- ஆம் ஆண்டு சேலம் உருக்கு ஆலையை விற்பனை செய்ய ஏலம் விடப்பட்ட நிலையில், ஏராளமான விண்ணப்பங்கள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்களில் தகுதியானவைத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

 

 இந்த சூழலில், சேலம் உருக்கு ஆலையை வாங்க விண்ணப்பித்தவர்கள், அதன் பிறகு, அந்நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை என முதலீடு மற்றும் பொதுச்சொத்தை நிர்வகிக்கும் துறை தெரிவித்துள்ளது. மேலும், சேலம் உருக்காலையைத் தனியாருக்கு விற்கும் திட்டத்தை கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே, துர்காபூரில் உள்ள அலாய் ஸ்டீல்ஸ், கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா ஸ்டீல்ஸ் ஆகிய நிறுவனங்களையும், தனியாருக்கு விற்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது மூலம் 51,000 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், தற்போது இதுவரை 10,052 கோடி மட்டுமே மத்திய அரசு திரட்டியுள்ளது.