ட்ரெண்டிங்

கிலோக் கணக்கில் கலப்பட வெல்லதைப் பறிமுதல் செய்த அதிகாரிகள்!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட காமலாபுரம் பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர்.ஆர். கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி உள்ளிட்டோர் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளை ஆய்வுச் செய்தனர்.

 

இந்த ஆய்வின்போது, எல்லப்புளியில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கரும்பாலையில் ரூபாய் 1,26,000 மதிப்பிலான 50 கிலோ கிராம் எடைக் கொண்ட 63 வெள்ளை சர்க்கரை மூட்டைகள் வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த ஆலையில் இருந்த ரூபாய் 46,800 மதிப்பிலான 1,080 கிலோ கிராம் வெல்லமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் இருந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு பகுப்பாய்விற்காக திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

அதைத் தொடர்ந்து, செந்தில்குமார் என்பவரிடம் விசாரணை செய்ததில் வெல்லத்தில் கலப்பதற்காக வாங்கப்பட்ட வெள்ளை சர்க்கரை மூட்டைகள் காமலாபுரம் பிரிவில் உள்ள சன் டிரேடர்ஸ் நிறுவனத்தில் இருந்து மொத்தமாக வாங்கியதாகத் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சன் டிரேடர்ஸ் நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டு அங்கு ரூபாய் 16 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கிராம் எடை கொண்ட 800 வெள்ளை சர்க்கரை மூட்டைகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிறுவனத்திற்கு அருகில் செயல்பட்டு வந்த சாய் சக்தி நிறுவனம் ஆய்வுச் செய்த அதிகாரிகள், ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கிராம் எடை கொண்ட 250 வெள்ளை சர்க்கரை மூட்டைகளைப் பறிமுதல் செய்துள்ளனர். இரண்டு நிறுவனங்களிலும் அதன் கொள்முதல் விவரம் மற்றும் விற்பனை விபரம் ஆகியவைகள் சம்பந்தமான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவின் அடிப்படையிலும், உணவு பகுப்பாய்வு முடிவின் அடிப்படையிலும் மேல் நடவடிக்கை தொடரப்படும் எனவும், வெல்லம் தயாரிப்பின் போது வெள்ளை சர்க்கரை கலப்பது கண்டறியப்பட்டாலோ, உணவு பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலோ உணவு பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.ஆர்.கதிரவன் தெரிவித்தார்.