ட்ரெண்டிங்

பெரியார் பல்கலை.துணைவேந்தருக்கு ஜாமீன்- பதில் தர ஆணை!

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கியது குறித்து அறிக்கை தாக்கல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அரசுப் பணியைத் தவறாகப் பயன்படுத்திய விவகாரத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்ற அனுமதியுடன் கடந்த

டிசம்பர் 27- ஆம் தேதி முதல் ஜெகநாதனின் வீடு பல்கலைக்கழகத்தின் அலுவலகம், பல்கலைக்கழக பதிவாளரின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

 

அந்த சோதனையின் போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெகநாதனின் வங்கிக் கணக்கு மற்றும் வங்கியில் உள்ள அவரது லாக்கர்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனைகளைத் தொடர்ந்து, ஜெகநாதனுக்கு நெருக்கமான நபர்களிடம் விசாரணை நடத்த காவல்துறையினர், திட்டமிட்டுள்ளனர்.

 

இதனிடையே, ஜெகநாதனுக்கு வழங்கப்பட்ட இடைக்காலப் பிணையை ரத்துச் செய்யக்கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று (ஜன.02) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு ஜாமீன் வழங்கியது குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், ஜாமீனை ரத்துச் செய்யக்கோரி காவல்துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க துணைவேந்தர் தரப்புக்கும் உத்தரவிட்டுள்ளது.

 

இதையடுத்து, துணைவேந்தர் தொடர்பான வழக்கு விசாரணையையும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.