ட்ரெண்டிங்

பெரியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது நாளாக காவல்துறையினர் சோதனை!

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் கைதாகி நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், பெரியார் பல்கலைக்கழகம் உள்பட ஏழு இடங்களில் மாநகர காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

 

போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிறுவனங்களைத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவுச் செய்த கருப்பூர் காவல்துறையினர், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவருக்கு அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, துணைவேந்தருக்கு சூரமங்கலம் காவல் நிலையத்தில் நாள்தோறும் சென்று கையெழுத்திட வேண்டும்; காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் அவருக்கு நீதிபதி தினேஷ் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தார்.

 

அதேபோல், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் துறை பேராசிரியர் சதீஸ், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராம்கஷ் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டிருந்தனர்.

 

இதனிடையே, பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தர் அறை, அவரது குடியிருப்பு, விருந்தினர் விடுதி, பதிவாளர் அறை, கணினி அறிவியல் துறை பேராசிரியரின் அறை, சூரமங்கலத்தில் பதிவாளருக்கு சொந்தமான இல்லம் உள்ளிட்ட 7 இடங்களில் 50- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக காவல்துறையினர் தொடர்ந்து சோதனையில் எடுப்பட்டுள்ளனர்.

 

காவல்துறையினரின் சோதனையால் பெரியார் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு நிலவுகிறது.