ட்ரெண்டிங்

விஜயராஜ் விஜயகாந்த் ஆன கதை.....திரையுலகம் மட்டுமின்றி அரசியலிலும் சாதித்த விஜயகாந்த்!

 

உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் (வயது 71) , சிகிச்சைப் பலனின்றி இன்று (டிச.28) காலை உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

 

விஜயகாந்த் கடந்து வந்த பாதை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 

கடந்த 1952- ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்தில் பிறந்தவர் விஜயகாந்த். சிறுவயதில் அவரது குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்ததால் இளமைக் காலத்தை அங்கு கழித்தார். 1978- ஆம் ஆண்டு இனிக்கும் இளமை திரைப்படம் விஜயகாந்தின் முதல் படமாக வெளியானது.

 

விஜயராஜ் என்ற இயற்பெயரை இனிக்கும் இளமை படத்தின் இயக்குநர் காஜா விஜயகாந்த் என மாற்றினார். அடுத்தடுத்த ஆண்டுகளில் தூரத்து இடிமுழக்கம், சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்டப் படங்களில் நடித்தார். தொடர்ந்து புரட்சிகர கதா பாத்திரங்களில் நடித்ததால் புரட்சிக் கலைஞர் என அழைக்கப்பட்டார் விஜயகாந்த். தமிழைத் தவிர வேறு எந்த மொழிப் படங்களிலும் நடிக்காத பிடிவாதம் கொண்டவர் விஜயகாந்த்.  

 

இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை அதிகளவில் அறிமுகப்படுத்தியப் பெருமைக் கொண்டவர் விஜயகாந்த். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரை இயக்குநராக அறிமுகப்படுத்திய பெருமைக் கொண்டவர். பாவாணன், அரவிந்த்ராஜ், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோரை அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த்.

 

100-ஆவது படமான கேப்டன் பிரபாகரன் மூலம் கேப்டன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். விஜயகாந்த் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த படங்கள் இன்றளவும் பேசப்படும் வகையில் அமைந்துள்ளன. நியாயத்திற்காக போராடும் போலீஸ் கதாபாத்திரம் என்றால் ரசிகர்களின் மனதில் நிற்பது விஜயகாந்த் தான்.

 

ஊமை விழிகள், சத்ரியன், புலம் விசாரணை என போலீஸ் படங்களில் வெற்றிகளைக் குவித்தவர் விஜயகாந்த். கிட்டத்தட்ட 150- க்குள் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த விஜயகாந்த் 2015- க்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

 

கடந்த 1999- 2004- ஆம் ஆண்டு வரை நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, கடனில் இருந்த சங்கத்தை மீட்டெடுத்தார் விஜயகாந்த். மதுரையில் 2005- ஆம் ஆண்டு செப்டம்பர் 14- ஆம் தேதி தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சித் தொடங்கிய அடுத்த ஆண்டில் நடந்த பேரவைத் தேர்தலில் வென்று எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்திற்கு சென்றார்.

 

விருத்தாசலம் தொகுதியில் வென்ற விஜயகாந்த் தே.மு.தி.க.வின் ஒற்றை எம்.எல்.ஏ.வாக பேரவையில் நுழைந்தார். கடந்த 2011- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 29 இடங்களில்வென்றது . 29 இடங்களில் வென்ற விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகப் பேரவைக்குள் நுழைந்தார்.

 

மக்கள் நலக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கிய நடிகர் விஜயகாந்த் கடந்த 2016- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.