ட்ரெண்டிங்

பராமரிப்பு இல்லாத விளையாட்டு மைதானம்.... மாநகராட்சிக்கு மாணவர்கள் கோரிக்கை! 

சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், அருகாமையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் பொதுவாக, ஒரே ஒரு விளையாட்டு மைதானம் உள்ளது. 

பள்ளிகளில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த மைதானம் முறையான பராமரிப்பு இல்லாமல், புதர்மண்டிப் பாதிப் பரப்பளவை மட்டுமே பயன்படுத்தப்படக் கூடிய நிலையில் காணப்படுகிறது. 

இதனை சிலர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, இரவு நேரங்களில் மைதானத்திற்கு வந்து மது அருந்திவிட்டு, பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். அதேபோல், மாணவர்கள் பயன்படுத்த அமைக்கப்பட்ட குழாயில் இருந்து குடிநீரை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், துணி துவைப்பதற்கும், தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதால் அந்த இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

அதேபோல், மைதானத்தின் நுழைவு வாயிலில் மலை போல் குப்பைகள் குவிந்துள்ளதாலும், கடுமையாக துர்நாற்றம் வீசுவதால், மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இது குறித்து மாநகராட்சி நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிகளில் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.