ட்ரெண்டிங்

ஆன்லைன் மூலம் 8 லட்சம் ரூபாயை இழந்த இளைஞர்!

சேலம் மாவட்டம், பொன்னம்மாப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால், அதிகம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்ததை நம்பி, சம்மந்தப்பட்ட வங்கிக்கணக்கிற்கு சுமார் ரூபாய் 8 லட்சத்து 7 ஆயிரத்து 952 அனுப்பினார். பின்னர், குறுஞ்செய்தி வந்ததொலைபேசி  எண்ணை தொடர்புக் கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர் உடனடியாக, சேலம் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இளைஞரிடம் மோசடி செய்யப்பட்ட பணம் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு சென்று இருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், அறிமுகம் இல்லாத நபர்கள் அனுப்பும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.