ட்ரெண்டிங்

சேலத்தில் ஜமாபந்தி- பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை!

சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 18) நடைபெற்ற வருவாய் தீர்வாயம் 1433- ல் வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். 

பின்னர். மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,  சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜூன் 18 முதல் ஜூன் 26 வரை நடைபெற உள்ள 1433- ம் பசலிக்கான வருவாய் தீர்வாயத்தில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா. வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, குடும்ப அட்டை, வகுப்புச் சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று, இருப்பிடச் சான்று, ஆதரவற்ற, விதவைச் சான்று, கணினி சிட்டா பெயர் திருத்தம், மின்சார இணைப்பு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, நில அளவை, குடிநீர், பொது சுகாதாரம், தெரு விளக்கு, சாலை வசதி, பசுமை வீடு, சிறு, குறு விவசாயி சான்று மற்றும் இதர மனுக்களையும் விண்ணப்பித்து பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மற்றும் நாளை (ஜூன் 19 ) ஆகிய நாட்களில் பனமரத்துப்பட்டி குறுவட்டத்திற்கான வருவாய் தீர்வாயமும், ஜூன் 20- ஆம் தேதிஅன்று வலசையூர் குறுவட்டத்திற்கான வருவாய் தீர்வாயமும், ஜூன் 21- ஆம் தேதி அன்று சேலம் நகரம் குறுவட்டத்திற்கான வருவாய் தீர்வாயமும் நடைபெறுகிறது.

அந்த வகையில், இன்றைய தினம் சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, உழவர் பாதுகாப்பு
திட்டத்தின் உதவித்தொகை, வகுப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றப்பட்டது. பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு வழங்கப்பட்டு, தகுதியுடைய மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, வகுப்புச் சான்றிதழ். சிறு, குறு விவசாயிச் சான்றிதழ், முதல் பட்டதாரிச் சான்றிதழ் வேண்டி மனு அளித்த 7 மனுதாரர்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதேபோன்று, மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து வருவாய் தீர்வாயங்களிலும் தொடர்புடைய அலுவலர்கள் பொதுமக்களின் மனுக்களின் மீது தனி கவனம் செலுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.