ட்ரெண்டிங்

மினி லாரி கவிழ்ந்து விபத்து.....தக்காளிகளை அள்ளிச் சென்ற பொதுமக்கள்!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தக்காளியை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து சுமார் 10,000 கிலோ தக்காளியை ஏற்றிக் கொண்டு வந்த மினி லாரியின் டயர் வெடித்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், மினி லாரியில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலையில் விழுந்தது.

 

இந்த நிலையில், சாலையில் கொட்டிய தக்காளிகளை அப்பகுதி மக்களும், சாலையில் சென்றவர்களும் அள்ளிச் சென்றனர். விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

 

இதனிடையே, தக்காளியை அள்ளிச் சென்றவர்கள் "ஆஹா என்ன தக்காளி....அற்புதமாக உள்ளது; சூப்பராக உள்ளது" என்று குறிப்பிட்டு அள்ளிச் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

விபத்தில், மினி லாரியின் முன் பகுதி முழுவதும் பலத்த சேதமடைந்த நிலையில், லாரியின் ஓட்டுனர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.