ட்ரெண்டிங்

தலைவர்கள் பிறந்தநாள்- பேச்சுப் போட்டிகளுக்கு ஏற்பாடு! 

சேலம் மாவட்டத்தில், அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ. மாணவிகளுக்கு நடைபெறவுள்ளன. 

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தன.

அவ்வறிப்பிற்கிணங்க, சேலம் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளுக்கான பேச்சுப்போட்டிகள் ஜூலை 02- ஆம் தேதி அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளுக்கான பேச்சுப்போட்டி ஜூலை 03- ஆம் தேதி அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அரசுக் மகளிர் கலைக் கல்லூரியில் காலை 09.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. 

கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூபாய் 5,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 3,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும் மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக தலா ரூபாய் 2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் நேரடியாக போட்டி நடைபெறும் இடத்திற்கு மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் காலை 08.30 மணிக்கு வருகை தந்து, போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.