ட்ரெண்டிங்

சேலத்தில் இருந்து சென்னை பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்க வேண்டும்- எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திà

 

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், இன்று (டிச.06) காலை 11.30 மணிக்கு நாடாளுமன்றத்தின் மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் ரயில்வே கோரிக்கைகள் சம்மந்தமாகப் பேசினார்.

 

அப்போது அவர் கூறியதாவது, "சேலம் மாவட்டம், காக்காபாளையம், இளம்பிள்ளை, வேம்படிதாளம் பகுதியில் சுமார் 20,000 மேற்பட்டோர் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வேம்படிதாளம் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை வழியாக தினமும் 50,000- க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. பாலம் ஒருவழிப்பாதையாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் உள்ளது.

 

 

இதனால் இப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தப் பகுதியில் ரயில்வே பாதையை மேல்நிலைப் பாலமாக அமைக்கவும் அல்லது தற்போதுள்ள சுரங்கப்பாதையை இரட்டைப் பாதையாக மாற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறேன்.

 

சேலம்- விருத்தாசலம் ரயில் பாதை ஒரு வழித்தடமாக உள்ளதால் ரயில்கள் எப்போதும் தாமதமாக வருகின்றன. சேலம்- விருத்தாசலம் வழித்தடத்தை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும். மேலும் சேலம்- விருத்தாசலம் மார்க்கத்தில் சென்னைக்கு பகல் நேர விரைவு ரயில் இயக்க வேண்டும்.

 

தினசரி இயக்கப்படும் யஸ்வந்த்பூர்- கண்ணூர் (ரயில் எண் 16527) மற்றும் கண்ணூர்- யஸ்வந்த்பூர் (ரயில் எண் 16528) அதிவிரைவு ரயில் ஓமலூரில் வசிப்பவர்கள் ரயில்கள் பலருக்கு உயிர்நாடியாக மாறியுள்ளது. ஆனால்,ஓமலூர் ஸ்டேஷனில் நிறுத்தம் இல்லாததால், மக்கள் சேலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.ஓமலூர் ஸ்டேஷனில் இரு திசைகளிலும் இந்த ரயில்களுக்கு நிறுத்தம் வழங்குவதை பரிசீலிக்குமாறு ரயில்வே அமைச்சகத்தை கேட்டுக் கொள்கிறேன். இதனால் திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு போன்ற இடங்களுக்குச் செல்லும் ஓமலூர் மக்கள் செல்ல பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.