ஆன்மிகம்

ஆவணி மாத முகூர்த்தங்கள்- வெள்ளி, தங்க நகைகளின் விற்பனை அமோகம்!

கடந்த ஆடி மாதத்தில் முகூர்த்தங்கள் இல்லாததால் தங்க நகைகளின் விற்பனை 30% முதல் 40% வரை சரிந்துள்ளது. தற்போது ஆவணி மாதம் பிறந்துள்ள நிலையில், நான்கு முகூர்த்தத் தினங்கள் ஏற்கனவே முடிந்துள்ளது. இந்த முகூர்த்த நேரங்களில் நகைகளின் விற்பனை வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. 

நடப்பு ஆவணி மாதத்தில் வரும் செப்டம்பர் 3, 11, 13, 17 ஆகிய நாட்கள் முகூர்த்த நாட்கள் ஆகும். இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள தங்க நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது. திருமணத்திற்கு தேவையான மாங்கல்யம், தாலி செயின் மற்றும் ஆரம், மோதிரம், வெள்ளி கொலுசு உள்ளிட்டவைகளின் விற்பனை அதிகரித்துள்ளதால் தங்க நகைக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இது குறித்து சேலம் தங்க நகைக்கடைகளில் உரிமையாளர்கள் கூறுகையில், ஆவணி மாதத்தில் நான்கு வளர்பிறை முகூர்த்தமும், மூன்று தேய்பிறை முகூர்த்தமும் வரவுள்ளது. பெண்கள் திருமணம் நிச்சயம் செய்தவர்கள் கடைகளுக்கு படையெடுக்கின்றனர். அதேபோல், மணமகன் வீட்டாரும், மணப்பெண்ணுக்கு நகைகளை வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக, நகைகளின் விற்பனை வழக்கத்தை விட 30% அதிகரித்துள்ளது என்றனர். 

சேலம் மாநகரில் மட்டும் சுமார் 200- க்கும் மேற்பட்ட வெள்ளி, தங்கம் நகைகளை விற்பனை செய்யும் கடைகள் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.