ட்ரெண்டிங்

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் சாகுபடி நிறுத்தம்: விவசாயிகள் எச்சரிக்கை !

 

விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்த நிதிநிலை அறிக்கை; பயிர் சாகுபடி நிறுத்தும் போராட்டம் அறிவிப்பு – தமிழக விவசாயிகள் சங்கம்

சேலம், ஆக. 7:

தமிழக அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான கூட்டுறவு பயிர் கடன் முழுமையான தள்ளுபடி மற்றும் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

சேலத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பெரியண்ணன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, "கடந்த சில மாதங்களாக கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால் விவசாயிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்" என்றார்.

மேலும், "பல்வேறு இலவசத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தும் அரசு, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மட்டும் புறக்கணிப்பது ஏன்? விவசாயிகளுக்கு அரசு பாரபட்சம் காட்டுகிறது. விவசாயிகளை அரசு ஏளனமாக நினைக்கிறது" என்று அவர் குற்றம்சாட்டினார்.

ஆவின் நிர்வாகம் வழங்கும் கொள்முதல் விலையை விட தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு சுமார் ரூ.10 வரை கூடுதலாக வழங்குவதால், இதுவரை ஆவினுக்கு பால் வழங்கி வந்த பல விவசாயிகள் தற்போது தனியார் நிறுவனங்களுக்கு மாறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக ஆவினுக்கு நாள்தோறும் சுமார் 5,000 லிட்டர் பால் வரத்து குறைந்து வருவதாகவும், அந்த பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால், விரைவில் பயிர் சாகுபடியை நிறுத்தும் போராட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும் பெரியண்ணன் தெரிவித்தார்.

"அரசும் இயற்கையும் விவசாயிகளை கைவிட்டுவிட்டன. எங்களது குடும்பத் தேவைக்கு தேவையான அளவைத் தவிர, மீதமுள்ள சாகுபடியை நிறுத்தும் போராட்டத்தை முன்னெடுக்க ஆயத்தமாகி வருகிறோம்" என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.