"சேலத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்"- மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தகவல்!
சேலம் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் ஆகஸ்ட் 14- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்நிறுவனங்களில் காலியாக உள்ள தொழிற்பழகுநர் இடங்களைப் பூர்த்திச் செய்யும் பொருட்டு, ஆகஸ்ட் 14- ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் ஐ.டி.ஐ. முடித்த மாணவர்கள் தங்களுக்கு உரிய தொழிற்பழகுநர் இடங்களைத் தேர்வுச் செய்து உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் பயிற்சிப் பெற அழைக்கப்படுகிறார்கள். இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் ஒன்றிய அரசால் வழங்கப்படுகின்றது.
எனவே, ஐ.டி.ஐ. பயிற்சி முடித்து தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காதவர்கள் அனைவரும் தங்களது அனைத்து உண்மை சான்றிதழ்கள் மற்றும் நகல் சுய விவரத்துடன் தொழிற்பழகுநர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்". இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

