ட்ரெண்டிங்

பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (ஏப்ரல் 26) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் எந்த வகையான வன்முறையும் அரசு பொறுத்து கொள்ளாது எனவும். இவர்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவறுத்தியுள்ளார்.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எதுவாக காவல்துறை மாவட்ட சமூக நலத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அடங்கிய குழு செயப்பட்டு வருகிறது. இக்குழுவானது மாவட்டத்தில் பெறப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் அதன்மீது உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் நடைபெறும் கூட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான உதவி சேவை மையம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அறை எண் 120-ல் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மேலும் குழந்தை உதவி மையம் புறத்தொடர்பு பணிகள் சேலம் பதிய பேருந்து நிலையத்திலும் செயல்பட்டு வருகிறது. இது தவிர 1098 என்ற எண்ணில் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்கள் குறித்த புகார்களை வழங்கி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் கடந்த ஜனவரி 2025 முதல் தற்போது வரை குழந்தைகள் உதவி மையத்திற்கு 575 அழைப்புகள் மற்றும் சந்திப்புகள் வரப்பெற்று அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெறப்பட்ட அழைப்புகளில் 212 அழைப்புகள் குழந்தைகள் நலக்குழு மூலம் விசாரிக்கப்பட்டுத் தேவையான மறுவாழ்வு வசதிகள் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 383 அழைப்புகளுக்கு தொடர்புடைய அலுவலர்கள் நேரில் சென்று, குழந்தைகளை சந்தித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 

மேலும், மார்ச் 2025-இல் குழந்தை திருமணம் தொடர்பாக மாவட்ட அளவில் 28 புகார்கள் வரப்பெற்றது. இதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 14 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, இதில் ஈடுபட்ட தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரபெற்ற அழைப்புகளில் 13 அழைப்புகள் குழந்தைகள் திருமணங்கள் என தவறான தகவல் என நேரடி ஆய்வில் அறியப்பட்டுள்ளது. ஒரு புகார் பிற மாவட்டம் சார்ந்தவை என்பதால் நடவடிக்கைக்காக தொடர்புடைய மாவட்டங்களுக்கு புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் -2012 குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அதேபோன்று, மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் தொடர்பாக வரப்பெற்ற அனைத்து புகார்களுக்கும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை. காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் நிலை குறித்து அறிக்கை அளித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா, மாவட்ட மனநல ஆலோசகர் விவேகானந்தன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் சுகந்தி, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜெயந்தி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.