சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் உள்ள முத்துசாமி தெருவில் வசித்து வருபவர் அன்பழகன் (வயது 49). இவர் நேற்று முன்தினம் (நவ.27) வீட்டை பூட்டி விட்டு ஒரு திருமண வரவேற்பில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ளார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அன்பழகனும் அதிர்ச்சிக் காத்திருந்தது.
பூட்டு உடைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்து அவர் உள்ளே சென்ற போது, மர்மநபர் வீட்டில் இருந்து வெளியேறி ஓடினார். இதனை பார்த்த அன்பழகன் கூச்சலிட, அக்கம் பக்கத்தினர், அந்த நபரை மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர், அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில், அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
அவரிடம், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அஃப்ரித் (வயது 24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூபாய் 5,400 ரொக்கத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அம்மாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


