தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு சேலம் வருகையையொட்டி, அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம். இ.ஆ.ப. தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
2023-2024- ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக்குழு வரும் நவம்பர் 30- ஆம் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அரசு உறுதிமொழிகள் மீது தொடர்புடைய துறைகளின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவானது சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழி நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவின் தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளர் முனைவர் சீனிவாசன் மற்றும் குழுவின் உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்ரபாணி, பழனியாண்டி, மணி, மனோகரன், மோகன், ராமலிங்கம், வில்வநாதன், ஜெயக்குமார் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் இணைச் செயலாளர் கருணாநிதி. துணைச் செயலாளர் ரவி ஆகியோர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
மேற்படி குழுவினர் சேலம் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு சேலம் வருகையையொட்டி அரசு அலுவலர்கள் தங்கள் துறை தொடர்பான முழுமையான விவரங்களை குழுவிற்கு வழங்கிட ஏதுவாக தயார் நிலையில் வைத்துக் கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் இ.ஆ.ப. ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி இ.வ.ப., தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) கீதா பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன் உட்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.


