ட்ரெண்டிங்

கோனேரிப்பட்டி பருத்தி ஏலத்தில் ரூபாய் 30 லட்சத்துக்கு விற்பனையான பருத்திகள்!

சேலம் மாவட்டம், தேவூரை அடுத்த கோனேரிப்பட்டி கிளை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் நேற்று (ஆகஸ்ட் 23) பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், கோனேரிப்பட்டி,  தேவூர், சென்றாயனூர், கொட்டாயூர், குள்ளம்பட்டி, கல்வடங்கம், காவேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக் கொண்டு வந்திருந்தனர். 

ஏலத்தில் கலந்து கொண்ட சேலம், திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பருத்தி மூட்டைகளை வாங்கிச் சென்றனர். நாள் முழுவதும் நடைபெற்ற பருத்தி மூட்டைகளுக்கான பொது ஏலத்தில் சுமார் 1,232 பருத்தி மூட்டைகள் 30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. 

இதில், பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 6,669 முதல் ரூபாய் 7,462 வரையிலும், கொட்டு ரக பருத்தி ரூபாய் 4,509 முதல் ரூபாய் 5,609 வரையிலும் விற்பனையானது. பருத்தி மூட்டைகளுக்கு கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இந்த வேளாண்மைக் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகளிடம் இருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது; மேலும் நேரடியாக பருத்தி மூட்டைகள் விற்பனையாவதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.