ட்ரெண்டிங்

இடிந்து விழும் நிலையில் பள்ளிக் கட்டிடங்கள்!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

காமராஜர் பகுதியில் உள்ள ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500- க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். போதுமான இட வசதி இல்லை என்பதால், காமாண்டப்பட்டி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு, அங்கு ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

 

சுமார் 15 ஆண்டுகளாக் கண்டுகொள்ளாததால் பழைய பள்ளி கட்டிடம் தற்போது, சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. அங்கன்வாடி மையம், பொதுப்பணித்துறை அலுவலகம், ஓமலூர் பேரூராட்சித் தூய்மைப் பணியாளர் குடியிருப்பு ஆகியவை இதன் அருகில் இருக்கின்றன.

 

இந்த நிலையில், இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றன.  

 

இது குறித்து பேரூராட்சித் தலைவர் செல்வராணி கூறுகையில், "கட்டிடம் பொதுப்பணித்துறை வசம் உள்ளதாகவும், அவர்கள் ஒப்புதல் அளித்தால் கட்டிடம் இடித்து அகற்றப்படும்" எனவும் தெரிவித்தார். மேலும் கட்டிடத்தை அகற்ற அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் கட்டிடத்தை இடிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.