ட்ரெண்டிங்

"தந்திர மாடலாக தி.மு.க. ஆட்சி உள்ளது"- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

 

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர் கூறியதாவது, "பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு அறிக்கை மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். அதிகளவில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்த வேண்டும். ஆனால் அதை விடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சிப்பதுதான் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் வாடிக்கையாகிவிட்டது. திறமையற்ற, முதிர்ச்சியில்லாத அமைச்சராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இருப்பது வேதனைக்குரியது.

 

போக்குவரத்துத் துறையில் நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் சாதியைக் குறிப்பிட்டு, தொலைபேசி எண்களை கேட்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நகரப் பேருந்துகள் அனைத்திலும் இலவச பயணம் என வாக்குறுதி அளித்துவிட்டு, இன்றைக்கு ஒரு சில பேருந்துகளில் மட்டுமே இலவச பயணம் அளிக்கப்படுகிறது. தந்திர மாடலாக, தி.மு.க. ஆட்சி உள்ளது. இனிமேலாவது எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்துக்களை ஆராய்ந்து உரிய தீர்வு காண வேண்டும்.

 

குறுவை சாகுபடி பயிர்கள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவில்லை. இதனால் தண்ணீரின்றிக் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் உரிய முறையில் பயிர் காப்பீடு செய்ததால், ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 84,000 வழங்கப்பட்டது. அரசின் சார்பில் கூடுதல் ரூபாய் 20,000 வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த அளவிற்கு வழங்கப்படவில்லை" என்று குற்றம் சாட்டியுள்ளார்.