சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் புதியதாக தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவிப் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் (Franchise Fees) ரூபாய் 2 இலட்சம் முற்றிலுமாக விலக்கும். விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5% வரை சிறப்பு தள்ளுபடியும். பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும் மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.
18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தொழிலுக்கு ரூபாய் 6.50 லட்சம் முதல் ரூபாய் 7.50 லட்சம் வரை திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30% அல்லது அதிகபட்சம் ரூபாய் 2.25 இலட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50% அல்லது அதிகபட்சமாக ரூபாய் 3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5% முதல் 10% சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுப் பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.


